Wednesday, May 6, 2026

மக்தப்

 அஷ்ரப்


✅ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 


 கண்ணியம் நிறைந்த நன்மக்களே...


 சைத்தான் என்பவன் நம்மை எல்லா நேரமும் கண்காணித்து நமக்கு இடையூறு செய்து கொண்டிருப்பவன் ஆவான்...


 எனவே அந்த சைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் நாம் பாதுகாவல் தேடிக் கொண்டிருக்க வேண்டும்...


 ஆனால் இன்று மனிதர்களிலே சிலரோ அல்லது பலரோ அந்த ஷைத்தானினுடைய சில குணங்களை எடுத்து நடப்பவர்களாக நாம் காண்கிறோம்...


 குறிப்பாக கோபப்படுதல் என்பது சைத்தானிலிருந்து வெளிப்படுகிற ஒரு குணமாகும்...


... ஒரு மனிதனுக்கு கோபம் ஏற்பட்டு விட்டால் அவனது பேச்சும் செயல்பாடுகளும் அநாகரிகமாக மாறிவிடும்...


 இதனால் நல்ல நட்புகளை இழக்க வேண்டி வரும் 

நல்ல உறவுகளை இழக்க வேண்டி வரும் 

நல்ல தோழமைகளை இழக்க வேண்டி வரும்...


... மட்டுமல்ல சில பல நேரங்களில் நன்மக்களினுடைய மன வேதனைக்கும் ஆளாக நேரிடும்...


 எனவே இந்த கோபத்திலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால்

 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தரும் ஒரு செயலை நாம் பின்பற்ற வேண்டும்...


 உங்களில் ஒருவர் நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் அமர்ந்து கொள்ளவும்...


 அமர்ந்திருக்கும் போது கோபம் வந்தால் அவர் படுத்துக்கொள்ளவும்...


 நமது நிலையை இது போன்று மாற்றும் பொழுது கோபம்

 குறைய வாய்ப்பிருக்கிறது...


 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்...


 கோபம் சைத்தானின் தீண்டுதலால் ஏற்படுகிறது...

 சைத்தான் நெருப்பினால் படைக்கப்பட்டிருக்கிறான்..


 நெருப்பை அணைப்பதற்கு தண்ணீர் தேவை...


 எனவே உங்களில் ஒருவருக்கு கோபம் ஏற்பட்டால் அவர் ஒழு செய்து கொள்ளவும் என்று கூறினார்கள்.


 இவை மட்டுமல்ல வீண் பெருமை கொள்வதும் தற்பெருமை கொள்வதும் அகம்பாவம் கொள்வதும் இவை யாவுமே சைத்தானின் குணங்கள் ஆகும்...


 சுவனத்தில் வாழ்ந்து வந்த சைத்தான் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதற்கு காரணமே அவன் தற்பெருமையும் வீண் அகம்பாவமும் பேசியதுதான்!


 ஆகையால் இரவு நேரத்தில் நாம் படுக்கும்பொழுது ஆயத்துல் குர்ஸி ஓதிக்கொண்டு தூங்கினால் சைத்தானின் தீண்டுதல் நமக்கு ஏற்படாது என்று ஹதீசுகளில் சொல்லப்பட்டுள்ளது.


 அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று சொல்வதும் சைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேடுகிற ஒரு துஆவாகும்.


 எனவே சைத்தானின் தீங்குகளில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.

மக்தப்

 ✅ ஸல்மான் மாலிக்


 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...


 கண்ணியம் நிறைந்த நன்மக்களே...


 நான் உங்களிடம் உணவு உண்பதின் ஒழுக்கம் குறித்து பேச விழைகிறேன்...


 உணவு உண்ணும் போது 'பிஸ்மில்லாஹ்' என்று சொல்லவேண்டும்...


ஒவேளை பிஸ்மில்லாஹ்

 கூற மறந்தால், 'பிஸ்மில்லாஹி அவ்வலஹு வ ஆகிரஹு' என்று 

கூற வேண்டும்"


வலது கையினால் உண்ண வேண்டும்


"உங்களில் எவரும் இடது கையால் உண்ணவோ, பருகவோ வேண்டாம். ஏனெனில், ஷைத்தான் இடது கையால் உண்கிறான், பருகுகிறான்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


 வயிறு புடைக்க சாப்பிடுவது நல்லதல்ல...


... அதனால் அஜீரணக் கோளாறும் இன்ன பிற தொல்லைகளும் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு.


 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 


 "மனிதன் நிரப்புகிற பாத்திரங்களிலேயே தன் வயிற்றை நிரப்புவதைப் போன்ற கெட்ட பாத்திரம் எதுவும் இல்லை என்று கூறினார்கள்


ஆதமுடைய மகனுக்கு முதுகெலும்பை நேர்ப்படுத்த சில கவள உணவே போதுமானது என்றும்,


 ஒருவேளை நிரப்பவேண்டியிருந்தால், மூன்றில் ஒரு பங்கு உணவுக்கும், மூன்றில் ஒரு பங்கு பானத்திற்கும், மூன்றில் ஒரு பங்கு சுவாசத்திற்கும் ஒதுக்குங்கள் என்றும் கூறினார்கள்


 உணவை வீணாக்கக் கூடாது. கீழே விழுந்த உணவில் உள்ள அசுத்தங்களை நீக்கிவிட்டு உண்ண வேண்டும். இது அருட்கொடையை மதிப்பதற்கான அறிகுறியாகும்.


 சாப்பிடும் போது கவனம் சிதறாமல் உணவில் கவனம் செலுத்துவது சிறந்தது.


"நீங்கள் உண்ணும் உணவை நேசியுங்கள், அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்று நபி (ஸல்) கூறினார்கள், இது கருணை மற்றும் பெருந்தன்மையின் அடையாளமாகும். 



இந்த ஒழுக்கங்களைப பேணி

உணவு ஒரு அருட்கொடை என்பதை உணர்ந்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி, ஆரோக்கியமாக வாழ்ந்திட 

 அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்

மக்தப்

 ✅ ஃபவாது


 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 


 கண்ணியம் நிறைந்த நன் மக்களே...


 நான் உங்களிடம் நாவின் விபரீதங்கள் குறித்துப் பேச விழைகிறேன்...


அல்லாஹ் மனிதனுக்கு எத்த னையோ அருட்கொடைகளை வழங்கியுள்ளான்...


அவைகளில் மிக முக்கியமானது 

பேசும் நாவாகும்...


நாவை ஒரு கூரான கத்திக்கு ஒப்பாகக் கூறலாம்...


நாவைக் கொண்டு சுவர்க்கம் செல்லவும் முடியும்...


அதே நாவைக் கொண்டு நரகமும் செல்ல முடியும்...


ஆகவே நாம் நமது

நாவை பேணிப் பாதுகாத்திட வேண்டும்.


மனிதனின் உயர்வுக்கும், தாழ்வுக்கும் காரணமே நாவுதான் என்று சொன்னால் அது மிகையாகாது. 


இதை எப்படி நாம் பயன்படுத்துகிறமோ அதன் படியே முடிவும் இருக்கும். 


சிலர் இந்த நாவை அழகாக பயன்படுத்தி மக்களிடத்தில் வெற்றி பெற்று விடுகின்றனர்


...சிலர் இதே நாவை முறையற்ற வழியில் பயன்படுத்தி “மனிதர் களில் தரம் தாழ்ந்தவர்கள்” பட்டியலில் இடம் பெற்று விடுகிறார்கள்.


இப்படிப் பட்ட நாவைப்பற்றி

 நானும் ஹதீஸும் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்...


நிச்சயமாக அடியான் சில நேரங்களில் அல்லாஹ்வுடைய

பிரியத்திற்குரிய விஷயங்களை 

அதன் சிறப்பை உணராமலேயே கூறுகிறான்.


இருப்பினும்

அதற்காக அல்லாஹ்

அவனது 

அந்தஸ்துகளை உயர்த்துகிறான்.


நிச்சயமாக அடியான் சிலவேளைகளில் அல்லாஹ்வின் கோப த்திற்குரிய விஷயங்களை 

அதன் தீங்கு களை உணராமலேயே பேசிவிடுகிறான். அதன் காரணமாக அவன் நரகில் 

வீழ்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


ஓர் அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா? கெட்டதா? என்று) சிந்திப்ப தில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் மத்தியிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் நரகில் விழுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


(நாளை மறுமையில்) மனிதர்களை முகக் குப்புற நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவு செய்த தவறே தவிர வேறெதுவும் இல்லை என ஒரு நீண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள். (திர்மிதி)


அரைகுறை ஞானமுள்ள எந்த விஷ யத்தையும் நாம் வெளிப்படுத்தக் கூடாது ஏனெனில் நாம் பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லையும் வானவர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் தவறாகப் பயன்படுத்திய வார்த்தைகளைப் பற்றி மறுமை நாளில் விசாரிக்கப்பட்டு, அவற் றிற்குரிய தண்டனை வழங்கப்படும். (அல்-ஹதீஸ்)


நாம் சிந்திக்காமல் பேசும் சில வார்த் தைகள் நம்மை நரகத்தின் அடித்தளத் திற்கே கொண்டு போய்ச் சேர்த்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதை மனதில் பதிய வைக்க வேண்டும்.


இந்த ஹதீஸ் நாவை எந்த அளவிற்கு கவன மாகக் கையாள வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. நாவினால் நிகழும் சில தவறுகள் இங்கே குறிப்பிடப் படுகின்றன. அவற்றைத் தெரிந்து முற்றிலும் அப்படிப்பட்ட தவறுகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மக்தப்

 ✅ Z பைஸான்


 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 


 எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் 

 நமது மதரசா ஆண்டு விழா நடைபெறும் இந்தருணத்தில்...


... நான் உங்களிடம்

 துவாவை பற்றி சில வார்த்தைகள் பேச விழைகிறேன்...


 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ என்பது வணக்கத்தின் மூளை என்று சொன்னார்கள் 


 அல்லாஹ்விடத்தில் நாம் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேட்டுப் பெற முடியும்...


... ஆனால் நாம் துஆவின் மூலமாக கேட்பது ஹலால் ஆனதாக இருக்க வேண்டும்...


 ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடத்தில் கேட்டால் அவன் எரிச்சலடைவான்...


... ஆனால் அல்லாஹ்விடம் நாம் கேட்காமல் இருந்தால் அவன் எரிச்சல் அடைவான்...


 நமது துஆ ஒப்புக்கொள்ளப்படுவதற்கு சில ஒழுங்கு முறைகளை நாம் பேண வேண்டும்...


 முதலாவதாக ஹலாலான உணவும் உடையும் அவசியமாகும்...

... நம்முடைய உணவிலோ உடையிலோ வருமானத்திலோ ஹராம் கலந்திருந்தால் நமது துஆ ஏற்றுக் கொள்ளப்படாது...


... துவா செய்துவிட்டு நாம் அவசரப்படாமல் இருக்க வேண்டும்...


... அல்லாஹ் என்னுடைய துவாவை ஏற்றுக் கொள்வான் என்ற உறுதியோடு நாம் துஆ செய்ய வேண்டும்...


... பொடுபோக்குத்தனமாக துவா கேட்கக் கூடாது...


... நீ விரும்பினால் என்னை மன்னித்துவிடு நீ விரும்பினால் என்னை மன்னிக்காதே என்றெல்லாம் துவா செய்யக்கூடாது...


.,. உறவுகளை முறிப்பதற்காக துஆ செய்யக்கூடாது...


... துவா செய்யும் பொழுது அல்லாஹ்வை புகழ்ந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதிக்கொள்ள வேண்டும்...


... அல்லாஹ்விடத்தில் ஒரு விஷயத்தை கேட்பதில் நாம் சடைந்து விடக்கூடாது தொடராகக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்..!


 இது போன்ற ஒழுக்கங்களை பேணி நாம் துவா செய்யும் பொழுது நமது துஆ கபூலாவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது...


 எல்லாம் வல்ல அல்லாஹ் நமது துஆக்களை அங்கீகரிப்பானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்

மக்தப்

 ☘️ Z ஆதில்


 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...


 கண்ணியம் நிறைந்த நன் மக்களே...


 நான் உங்களிடம் சலவாத் ஓதுவதின் சிறப்பு குறித்து பேச விழைகிறேன்...


 நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் அந்த நபியின் மீது சலவாத் ஓதுகின்றனர்...

... ஈமான் கொண்டோரே நீங்களும் ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள் என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்...


... உலகில் முஃமினாக பிறந்த ஒவ்வொருவரும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும்...


... நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பெயரை நாம் உச்சரிக்கும் போதும் பிறரால் அதை நாம் கேட்கும்போதும் பெருமானார் மீது உடனே ஸலவாத்து சொல்ல வேண்டும்...


 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஒருமுறை ஸலவாத்து சொன்னால் பத்து நன்மைகள் எழுதப்பட்டு 10 பாவங்கள் மன்னிக்கப்பட்டு 10 பதவி உயர்வுகளில் வழங்கப்படுகிறது என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்...


 ஆனால் இக்காலத்தில் சலவாத் சொல்வதில் கஞ்சத்தனம் செய்பவர்கள் நிறைய உண்டு...


 ஆனால் சஹாபா பெருமக்கள் தமது வாழ்நாள் முழுக்க சலவாத் ஓதுவதிலேயே கழிக்க வேண்டும் என்று பிரியப்பட்டார்கள்.


 எதைச் செய்தால் அல்லாஹ் நம் மீது அருள் செய்வானோ அந்த விஷயங்களை மட்டும்தான் நபி அவர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்...


 தன்மீது ஸலவாத் ஓதுவதால் அல்லாஹ்வின் அருள் நம் மீது ஏற்படுகிறது என்பதால்தான் என் மீது நீங்கள் சலவாத்துச் சொன்னால் உங்களுக்கு உயர்வு உண்டு என்று நபி அவர்கள் சொன்னார்கள்...


 ஸலவாத் ஓதுவதால் மனம் நிம்மதி பெறுகிறது முகம் அழகு பெறுகிறது நமது காரியங்களிலே வெற்றி ஏற்படுகிறது...


 எனவே இந்த ஸலவாத்தை நாம் அனுதினமும் ஓதிட வேண்டும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் மீது அருள் செய்வானாக ஆமீன்

மக்தப் மத்ரஸா மாணவர்களின் பயான்

 👍🏼 அரீஸ் அலி


 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 


 கண்ணியம் நிறைந்த நன் மக்களே...


நான் ஒளுவின் பர்ளுகள் குறித்து உங்களிடத்தில் பேச விழைகிறேன்...


 ஒளுவின் பர்ளுகள் நான்காகும...


 முதலாவது முகம் கழுவுதல் 


 இரண்டாவது இரண்டு கைகளையும் முழங்கை வரை

கழுவுதல்


 மூன்றாவது தலை முழுவதையும் மஸ்ஹு செய்தல்


 நான்காவது இரண்டு கால்களையும் கரண்டை மொழி உட்பட கழுவுதல்...


 இந்த நான்கு உறுப்புகளில் ஏதேனும் ஒரு பகுதியில் சிறிதளவு தண்ணீர் படாமல் விடுபட்டாலும் அவருடைய ஒரு கூடாமல் போய்விடும்...


 எனவே இந்த நான்கு உறுப்புகளையும் கழுவும் பொழுது மிகப் பேணுதலோடு கவனத்தோடு செய்து கொள்ள வேண்டும்...


 ஏனென்றால் ஒளுவை பரிபூரணமாக செய்தால்தான் அவருடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும்...


 ஆகையால் ஒளுவை

 பரிபூரணமாக செய்ய வேண்டும்...


 எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக.

மக்தப் மாணவர்களின் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 

 கண்ணியம் நிறைந்த நன் மக்களே...

 நான் உங்களிடம் குர்ஆன் ஓத கற்றுக் கொள்வதால் ஏற்படும் சிறப்புகள் பற்றி பேச விழைகிறேன்...

... குர்ஆன் என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அற்புதமான வேதமாகும்...

... அதனை ஓதுவதும் அதில் உள்ள படிப்பினைகளை எடுத்துக் கொள்வதும் அதன் வழி நடப்பதும் முஸ்லிம்கள் மீது கடமையாகும்...

... குறைந்தபட்சம் நாம் அதை ஓத கற்றுக் கொள்ள வேண்டும்...

... பெற்றோர்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அவர்களது பிள்ளைகளுக்கு குர்ஆனை கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்...

... நமது பள்ளிவாசலில் அனுதினமும் மாலை நேரத்தில் மக்தப் மதரஸா நடைபெறுகிறது...

 நமது மதரசாவில் குர்ஆன் ஓதக் கற்பித்தல்  உள்ளிட்ட நல்லொழுக்கங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது...

 தமது பிள்ளைக்கு எந்த பெற்றோர் குர்ஆன் ஓத கற்றுக் கொள்ள முயற்சிப்பாரோ அதற்கான ஏற்பாடுகளை செய்வாரோ...

.... மறுமை நாளில் அந்த பெற்றோருக்கு அல்லாஹ் வழியினால் ஆன கிரீடத்தை அணிவித்து கண்ணியப்படுத்துவான்...

... எந்தப் பெற்றோர் தமது குழந்தைகளை இறையச்சத்தோடு நல்லொழுக்கத்தோடு வளர்ப்பார்களோ அந்த பெற்றோருக்கு மறுமை நாளில் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்...

 எனவே பெற்றோர்களே உங்களது பிள்ளைகளுக்கு குர்ஆன் கல்வியை கொடுத்திடுங்கள்...

... மதரசாவுக்கு தினந்தோறும் தவறாது அனுப்பி வைத்திடுங்கள்...

 குர்ஆன் ஒருவர் ஓதுகிறார் என்றால் ஓர் எழுத்துக்கு பத்து நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான்...

... குர்ஆன் ஓதுபவரை சுற்றிலும் மலக்குகள் ஸகீனத் என்ற அமைதியை இறக்குகிறார்கள்...

... குர்ஆன் ஓதுபவரின் முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்...

 வீடுகளில் வைத்து குர்ஆன் ஓதும்போது அங்குள்ள தீய சக்திகள் வெளியேறி அந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு மன அமைதி ஏற்படும்...

 இதுபோன்ற பல்வேறு விதமான பலாபலன்களை கொண்ட குர்ஆனை நாம் ஓதக் கற்றுக் கொள்வோம் அதன் வழி நடப்போம்...

 எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்

மக்தப்

 அஷ்ரப் ✅ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ   கண்ணியம் நிறைந்த நன்மக்களே...  சைத்தான் என்பவன் நம்மை எல்லா நேரமும் கண்காணித்து...